வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்த தருணத்திலேயே இயற்கையே சூரியனை மறைத்தது. சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கப்போகும் வெற்றிக்கான அறிகுறி” என்று கூறினார்.

மேலும், “வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மக்கள் நமது வெற்றிக்கு துணை நிற்பார்கள். கூட்டணிக் கட்சியினர் அனைவரும் எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களின் தேவைகளை மத்திய அரசு முழுமையாக பூர்த்தி செய்ததாகக் கூறிய அவர், “மக்கள் கேட்ட திட்டங்களை மத்திய அரசு உடனடியாக வழங்கியது. மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருந்ததால்தான் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முடிந்தது” என்றார்.

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. மக்களை வாட்டி வதைக்கும் இந்த ஆட்சி தேவையா? திமுக ஆட்சி மக்களுக்கு கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல் மட்டுமே” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். இதுதான் திமுகவுக்கான இறுதித் தேர்தல். தமிழக மக்கள் இந்த ஆட்சியால் சலித்துவிட்டனர். மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்” என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கையுடன் அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் உரிமைகளை காக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக நிற்கும்” என்று தெரிவித்தார்.

இறுதியாக, “பை… பை… ஸ்டாலின்” எனக் கூறி திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டம் தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெறும் வகையில் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.