இஸ்லாமாபாத்: “என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயற்சிக்கிறது” என்று முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவரை குடும்பத்தினர் சந்திக்க பல மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவர் சிறையிலேயே கொல்லப்பட்டாரோ என்ற சந்தேகம் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இம்ரான்கானின் 5 சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைத்துறை, “இம்ரான் கான் நலமாக உள்ளார்” என்று தெரிவித்தது. பின்னர், அவரது சகோதரி உஸ்மாவுக்கு சந்திப்பு அனுமதி வழங்கப்பட்டது. சிறையில் அவரை சந்தித்து வெளியே வந்த உஸ்மா, “இம்ரான் கான் உயிருடன், நலமாக உள்ளார். ஆனால் அவருக்கு கடுமையான மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது” என்றார்.
அதனைத் தொடர்ந்து, உஸ்மா சந்தித்த பின்னர் இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையை அவரது கட்சி பொதுமக்களுக்கு வெளியிட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
“எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்யாதது எதுவும் இல்லை. அவர்களின் அடுத்த திட்டம் என்னைக் கொல்லுவதுதான். எனது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மரண தண்டனை கைதியைப் போல என்னை நடத்துகின்றனர். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் ராணுவத் தலைவரும் ஐ.எஸ்.ஐ. டிஜியும் பொறுப்பாவார்கள்.
ஒரு கூண்டில் விலங்குகளை விட மோசமாக அடைத்துள்ளனர். 5 நாட்கள் எனது அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் முழுவதும் நான் தனிமையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமானமற்றவை. ராணுவத் தளபதி அசிம் முனீர் வரலாற்றிலேயே மிகக் கொடுங்கோலர். மனநிலையில் கூட நிலைத்தன்மை இல்லை. எனக்கு நடைபெறும் அனைத்து சித்ரவதைக்கும் அவர் தான் காரணம்.” என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சாரம், சூரிய ஒளி, சுத்தமான குடிநீர், போதிய உணவு, மருத்துவ வசதி, கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படாமல் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி குற்றம்சாட்டியுள்ளது.