Home » டில்லியில், கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

டில்லியில், கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஒவ்வொரு குடும்பத்திலும், கொரோனாவினால் ஒருவர் உயிரிழந்திருப்பார். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில், பணம் சம்பாதிப்பவர்கள் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.2,500 பென்சன் வழங்கப்படும். இழப்பீடும் வழங்கப்படும். கணவர் உயிரிழந்திருந்தால், மனைவிக்கும், மனைவி உயிரிழந்திருந்தால் கணவருக்கும் வழங்கப்படும். திருமணமாகாத நபர் உயிரிழந்திருந்தால், அவர்களின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

கொரோனாவினால், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அக்குழந்தைகள். 25 வயதாகும் வரை இந்த நிதி வழங்கப்படும். அத்துடன் இலவச கல்வியும் வழங்கப்படும்.

டில்லியில் 72 லட்சம் ரேசன் கார்டுகள் உள்ளன. அவற்றிற்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ ரேசன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாதம் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் மத்திய அரசு வழங்கும் ரேசன் பொருட்களும் வழங்கப்படும். அந்த வகையில், இந்த மாதம், ஒவ்வொரு ரேசன் கார்டுதாரரும் 10 கிலோ பொருட்களை இலவசமாக பெறுவார்கள்.

ரேசன்கார்டு இல்லாத ஏழைகளுக்கும், ரேசன் பொருட்களை டில்லி அரசு இலவசமாக வழங்கும். இதற்காக அவர்கள் வருமான சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. அவர்கள், நாங்கள் ஏழைகள், ரேசன் பொருட்கள் வேண்டும் எனக்கூறினால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.

விமானத்தை நிறுத்துங்கள்: கெஜ்ரிவால் கோரிக்கை

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:சிங்கப்பூரில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரசால் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை உருவாகலாம். ஆதலால், மத்திய அரசுக்கு நான் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

முதலாவதாக சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானச் சேவையையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரத்தில் இருக்கிறது. முதல் அலையில் முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்பைச் சந்தித்தனர். 2வது அலையில் இளைஞர்கள், நடுத்தர வயதினர் உயிரிழக்கின்றனர். அடுத்துவரும் 3வது அலை குழந்தைகளைத் தாக்கும் என, பல்வேறு மருத்துவ வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன், ‘இந்தியாவில் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதைத் தவிர்க்க முடியாது. ஆதலால், தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும்’ என, எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *