இஸ்லாமாபாத்:
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை தற்போது பாகிஸ்தானை அரசியல், பொருளாதார ரீதியாகக் குலைத்துள்ளது. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருப்பது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா கடும் நடவடிக்கையாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதை பாகிஸ்தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
சிந்து நதி பாகிஸ்தானின் உயிர்நாடி எனலாம். அந்த நதிநீரை அடிப்படையாகக் கொண்டே அந்நாட்டின் விவசாயம், பாசனம், குடிநீர் வசதி, மற்றும் தொழில்துறை வளர்ச்சி நடைபெறுகிறது. பாகிஸ்தானின் 80 முதல் 90 சதவீத விவசாயம் சிந்து நதிநீரை மட்டுமே நம்பியுள்ளது. இதனால் இந்தியா நீரைத் தடுத்துவிடும் என்ற செய்தி பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு பாகிஸ்தான் கடந்த 9 மாதங்களாக பல்வேறு வழிகளில் தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறது. இந்திய தூதர்களை அழைத்து சென்று விசாரணை நடத்துதல், ஐநா பாதுகாப்பு சபை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), உலக வங்கி போன்ற அனைத்துச் சர்வதேச மன்றங்களிலும் இதை பிரச்சினையாக எடுத்துச் சென்றது. ஆனால் இதுவரை எந்த மன்றத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
இந்தியாவின் இந்த முடிவால் பாகிஸ்தான் தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடியில் திணறி வருகிறது. தர்பேலா, மங்களா போன்ற அணைகள் தற்போது தண்ணீரின்றி வெறிச்சோடியுள்ளன. பாகிஸ்தானுக்கு தற்போது அதிகபட்சம் 30 நாட்களுக்கு மட்டுமே போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் அந்த நாட்டின் உணவுத்தொகை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் குழு தண்ணீரை “தேசிய நலன்” என அறிவித்து, சிந்து நதிநீரைத் தடுக்க முயற்சி செய்தால் அதை போர் நடவடிக்கையாகக் கருதுவோம் என எச்சரித்தது. இதற்கிடையில் பாகிஸ்தான் நாடாளுமன்றமும் இதை கடுமையாக எதிர்த்தது.
இதேநேரம், இந்தியா இதற்கு முன்பு பல முறை பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை செய்திருந்தது. தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் தனது நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தெரிவித்திருந்தது. எனினும் பாகிஸ்தான் அதனை புறக்கணித்து, தீவிரவாதிகளை ஆதரித்தது.
இதன் விளைவாக “ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது” என்ற அடிப்படையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
தற்போது பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன் நோக்கம் — இந்தியா ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தும் படி அழுத்தம் கொடுப்பது. ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றாமல் தற்காலிகமாக ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவிலேயே உள்ளது.
நிபுணர்களின் கருத்துப்படி, இந்தியா சிந்து நதி நீரை முழுமையாகத் தடுக்க தேவையான உள்கட்டமைப்பை தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த பணிகள் நிறைவேறினால், பாகிஸ்தான் கடும் தண்ணீர் பஞ்சத்துக்கு உள்ளாகி, அதன் பல பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
இவ்வாறு, இந்தியா எடுத்த இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தையும், அரசியலையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பது தெளிவாகிறது. உலக மேடைகளில் பாகிஸ்தான் எத்தனை முயன்றாலும், இந்தியா “அடிக்க வேண்டிய இடத்தில் சரியாக அடித்துள்ளது” என்பதே நிபுணர்களின் ஒருமித்த கருத்தாகும்.