வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான், தனது நிர்வாகச் செலவுகளை குறைப்பதற்காக பெரும் அளவில் பணியாளர் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது என்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அமேசான் நிறுவனம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு மாபெரும் ஈ-காமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமாகும். ஆன்லைன் வணிகம், கிளவுட் சேவை, செயற்கை நுண்ணறிவு, வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல துறைகளில் இந்த நிறுவனம் முன்னணியில் திகழ்கிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி, தொழில்நுட்ப துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பல நிறுவனங்கள் செலவு குறைக்கும் நோக்கில் பணியாளர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் அமேசானும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
கடந்த 2022 முதல் 2023 வரை, அமேசான் நிறுவனம் பல்வேறு துறைகளில் இருந்து மொத்தம் 27,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. பின்னர், 2025 அக்டோபர் 14ம் தேதி மேலும் 14,000 பணியிடங்களை குறைத்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் தனது 30 ஆண்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ், மொத்தம் 30,000 கார்ப்பரேட் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது. இதில் முதற்கட்டமாக, வரும் ஜனவரி 27ம் தேதி முதல் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அமேசானின் முக்கிய பிரிவுகளான Amazon Web Services (AWS), Retail Division, Prime Video, மற்றும் Human Resources (HR) துறைகளில் பணியாற்றும் பல உயர் அதிகாரிகள், மென்பொருள் பொறியாளர்கள், நிர்வாக ஊழியர்கள் ஆகியோர் இப்பணிநீக்க நடவடிக்கையின் பாதிப்புக்குள்ளாகலாம் எனக் கூறப்படுகிறது.
நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள உள்துறை குறிப்பில்,
“உலகளாவிய பொருளாதார சவால்கள், சந்தை மாற்றங்கள், செயற்கை நுண்ணறிவு துறையின் தாக்கம் ஆகியவற்றால், எங்கள் நிறுவனம் புதிய அமைப்புக் கட்டமைப்பை நோக்கி நகர்கிறது. நிர்வாகச் செலவுகளை குறைத்து, எதிர்கால வளர்ச்சிக்கான புதுப்பித்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்று விளக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவு, தற்போதைய வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற பல தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியுள்ள நிலையில், அமேசானின் இந்த புதிய அறிவிப்பு உலக தொழில்நுட்ப துறைக்கு மேலும் ஒரு அதிர்ச்சி அலை போல அமைந்துள்ளது.
நிபுணர்கள் கூறுவதாவது, “இந்த முடிவால், அமேசான் தனது நிதி சுமையை குறைத்தாலும், தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரிக்கலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித ஆற்றலை மாற்றும் நிலை உருவாகி வருகிறது” என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.