அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் நடைபெறவுள்ள அமைதி பேச்சுவார்த்தை புதிய கட்டத்தை எட்டியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள முதல் சுற்று நேரடி பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 14 முக்கிய அம்சங்களை கொண்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த 60 நாட்களுக்குள் முழுமையான அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.

இதையடுத்து ஜெனீவாவில் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றான லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற அம்சம் சர்ச்சையை ஏற்படுத்தியது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் ஈரான் அதிருப்தி தெரிவித்தது.

இந்த சூழலில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஈரான் அறிவித்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்காக ஜெனீவா செல்ல இருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது பயணத்தை ரத்து செய்தார். மேலும், லெபனானில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படாமல் எந்த பேச்சுவார்த்தையிலும் பங்கேற்க முடியாது என்று ஈரான் வலியுறுத்தியது.

பின்னர் அமெரிக்கா மற்றும் கத்தார் இணைந்து நடத்திய தீவிர முயற்சிகளின் மூலம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜெனீவா அமைதி பேச்சுவார்த்தைக்கான தடைகள் நீங்கின.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஜெனீவாவுக்கு புறப்பட்டுள்ளார். அதேபோல் டிரம்பின் மூத்த ஆலோசகரும் மருமகனுமான ஜாரெட் குஷ்னரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சுவிட்சர்லாந்தில் முகாமிட்டுள்ளார்.

மறுபுறம், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் தனது உயர்மட்ட குழுவுடன் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் பணியில் கத்தார் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியும் ஏற்கனவே ஜெனீவாவில் உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில், முன்பே கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின் 14 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக பிராந்திய பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகள், பொருளாதார தடைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் முக்கிய இடம் பெறும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், “அமைதி பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமெனில், ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் அமெரிக்காவிடம் இருப்பதை நிரூபிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் கவனித்து வரும் இந்த ஜெனீவா பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றத்தை குறைத்து நிலையான அமைதிக்கான வழியை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.