சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) சார்பில் டெல்லியில் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை முன்னிட்டு தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அபிஜீத் திப்கே தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, கல்வி முறை, தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மதியம் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆதரவாளர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை டெல்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பிற்காக பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, போலீசார் உடலில் அணியும் 270 நவீன கேமராக்களும் பயன்படுத்தப்பட உள்ளன. ஆர்ப்பாட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்படும் வகையில் டெல்லி போலீஸ் வீடியோகிராபர் குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தோற்றம் சமூக வலைதளங்களில் இருந்து ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கின் விசாரணையின் போது தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, அபிஜீத் திப்கே இன்ஸ்டாகிராமில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பக்கத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நகைச்சுவை மற்றும் அரசியல் நையாண்டி பதிவுகளால் கவனம் ஈர்த்த அந்த பக்கம், பின்னர் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களை பெற்றது.

ஒரு கட்டத்தில், முக்கிய அரசியல் கட்சிகளின் சமூக வலைதள கணக்குகளை விட அதிக வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கணக்குக்கு தடை விதிக்கப்பட்டாலும், அதே பெயரில் புதிய பக்கம் தொடங்கப்பட்டு மீண்டும் வேகமாக பிரபலமடைந்தது.

சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை மையமாக வைத்து இந்த அமைப்பு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தேர்வு முறைகேடுகள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு முன்பாக அமைப்பின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் பத்திரிகையாளர் சவுரவ் தாஸ் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், திரைப்பட இயக்குநர் விஜேதா தஹியா மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் செய்தித் தொடர்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அபிஜீத் திப்கே மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதரவாளர்கள் தோளில் சுமந்து சென்றபோது சிலர் அவரை தாக்கியதாக கூறப்பட்டதால் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் எழுந்தன.

இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் இரண்டாவது பெரிய ஆர்ப்பாட்டம் அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுமா அல்லது புதிய சர்ச்சைகளை உருவாக்குமா என்பது குறித்து அனைவரும் கவனித்து வருகின்றனர்.