சென்னை:
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தேர்தல் ஆணையம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே 10-ந்தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்னதாகவே சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டியது அரசியல் நடைமுறை. எனவே, தமிழகத்தில் தேர்தல் தேதியை இம்மாதம் இறுதிக்குள் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் முடிவடைந்தது
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த செயல்முறையில், சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள், இரட்டை பதிவில் இருந்தவர்கள் உள்ளிட்டோருடன் சேர்த்து, முகவரி மாற்றியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
அந்த அவகாசம் இன்று (பிப்ரவரி 10) முடிவடைந்தது. இதுவரை சுமார் 20 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்களே வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
தேர்தல் ஆய்வு மற்றும் திட்டமிடல்
இதற்கிடையில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகள் மற்றும் வாக்குச்சாவடி ஏற்பாடுகளைப் பற்றி இறுதி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறார்.
அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மற்றும் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள், மின் வாக்குப் பெட்டிகள் (EVM) உள்ளிட்ட விவரங்களையும் ஆய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2-வது வாரத்தில் தேர்தல் சாத்தியம்
மத்திய தேர்தல் ஆணையம், ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை பல கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் இரண்டாவது கட்டத்திலேயே தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதன்படி, நம்பகமான தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 2-வது வாரத்தில், குறிப்பாக ஏப்ரல் 13-ந்தேதி நடைபெறலாம் என கூறப்படுகிறது.
அதற்கான தயாரிப்புகள் – வாக்குச்சாவடி ஒதுக்கீடு, பணியாளர் நியமனம், வாக்குப்பெட்டிகள் விநியோகம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைவாக முன்னேறி வருகின்றன.
தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்வரை மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகள் மற்றும் செயல்முறை வடிவமைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளும் இதனை முன்னிட்டு தங்கள் பிரச்சாரத் திட்டங்களைத் துவங்கியுள்ளன.