வாஷிங்டன்:
இந்தியா – அமெரிக்கா இடையே நீண்ட கால இழுபறிக்குப் பிறகு, இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு விதித்து வந்த 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் பெரிய நன்மை கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்க அரசு இதற்கும் நிபந்தனையையும் இணைத்துள்ளது. இந்தியா இனி மீண்டும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், அந்த 25 சதவீத அபராத வரி மீண்டும் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பின், இந்தியாவில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் வரி இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அதேபோல், அமெரிக்க பொருட்களும் இந்தியாவுக்கு வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பும், வர்த்தக பாய்ச்சலும் புதிய உச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், “பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி பொருட்கள், விமானங்கள் மற்றும் விமானப் பாகங்கள், உலோகங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் நிலக்கரியை வாங்க உள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் உலக பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, எரிசக்தி துறையில் இந்தியாவின் இறக்குமதி வலுவடைவதோடு, அமெரிக்காவின் ஏற்றுமதி அளவும் பெரிதும் உயரும் என மதிப்பிடப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்தியாவுடன் கையெழுத்தான இந்த வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். எனது அரசாங்கத்தின் தலைமையில் அமெரிக்கா உலகின் முன்னணி எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறி வருகிறது. கடந்த சில மாதங்களில் இந்தியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “அமெரிக்காவின் நிலக்கரி ஏற்றுமதி மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நமது நிலக்கரியின் தரம் உலகின் எங்கும் காண முடியாத அளவிற்கு சிறந்தது. இதனால், அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெறுவதோடு, உலகளாவிய சக்திவாய்ந்த வர்த்தக பங்குதாரராக நாம் மாறியுள்ளோம்,” என டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்தியாவுடனான இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளைத் திறக்கும் வகையில் இருப்பதாக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.