சென்னை:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் திடீரென ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதை முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.1,000 தொகையுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு முன்கூட்டியே தலா ரூ.2,000 சேர்த்து, கோடைக்கால சிறப்புத் தொகையாக மேலும் ரூ.2,000 வழங்கியதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.5,000 தொகை, இன்று காலை மாநிலம் முழுவதும் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், “மகளிர் உரிமைத்தொகை என்பது எனது உறுதியான வாக்குறுதி. தேர்தலை காரணம் காட்டி இதை நிறுத்த முயன்றாலும், நான் பின்வாங்க மாட்டேன். பெண்களுக்கு நிதி சுதந்திரம் வழங்கும் நோக்கில் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும்,” என தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த அறிவிப்பை தேர்தலை நெருங்கி வரும் சூழ்நிலையில் வெளியிட்டது திமுகவின் “தேர்தல் பயத்திலிருந்து வந்த முடிவு” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தேர்தல் தோல்வி பயம் முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பாருங்கள். 28 மாதங்களாக ரூ.1,000 தொகையை தராமல் இழுத்தடித்த ஸ்டாலின் அரசு, இப்போது மூன்று மாதத் தொகையுடன் கோடைக்கால சிறப்புத் தொகை என பெயர் மாற்றி ரூ.5,000 வழங்குகிறது. 2024, 2025 ஆண்டுகளில் நமக்கே கோடைக்காலமே வரவில்லையே ஸ்டாலின் அவர்களே!” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “சிறுமி முதல் மூதாட்டி வரை எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிய பிறகு, தேர்தல் நெருங்கியவுடன் பணம் வழங்குவது ஒரு அரசியல் நாடகம் மட்டுமே. பெண்கள் இதை நம்பமாட்டார்கள்,” எனக் கூறினார்.

அதிமுக தலைவர் மேலும் சாடியதாவது, “செப்டம்பர் 2023 முதல் இதுவரை திமுக அரசு வழங்கிய உரிமைத்தொகை ரூ.34,000. ஆனால் இதே காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் இழந்தது குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம். இதைக் கண்ட மக்களிடம் அதிமுக வீடு வீடாகச் சென்று உண்மை வெளிப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில்தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது,” என்றார்.

அவர் மேலும், “அனைத்து குடும்ப அட்டைக்கும் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டுமே என கூறி 1 கோடி பெண்களை நிராகரித்துள்ளீர்கள். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ‘குல விளக்குத் திட்டம்’ மூலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும்,” எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில், “இந்தத் திட்டம் எந்தத் தேர்தலுடனும் தொடர்பற்றது. இது மகளிரின் உரிமை, நமது திராவிட மாடல் அரசின் பொறுப்பும் ஆகும்,” என வலியுறுத்தினார்.

திமுக அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் முன் முக்கிய அரசியல் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஒரு பக்கம் பெண்களுக்கு நிதி ஆதரவாகக் கருதப்படும் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன; மற்றொரு பக்கம் அதிமுக இதை “வாக்கு வேட்டைக்கான முயற்சி” என கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.