சென்னை:
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் மறதி நோயை (Dementia) ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பான Dementia India Alliance இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார் மற்றும் Dementia India Alliance நிறுவனத் தலைவர் ராதாமூர்த்தி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மாநில அளவில் மறதி நோயை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் மறதி நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் சிறப்பு பரிசோதனை முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மறதி நோய்க்கான மருத்துவ உதவி, தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. மேலும், பொதுமக்கள் மத்தியில் மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.
மருத்துவ ஊழியர்கள், சமூக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு மறதி நோயாளிகளை கையாளும் பயிற்சிகள் அளிக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு மனநல ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது. மறதி நோயாளிகளுக்கான பராமரிப்பு மையங்கள் உருவாக்குதல், வீட்டிலேயே பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் இதில் அடங்கும்.
மேலும், மறதி நோயை பற்றிய ஆய்வு மற்றும் தரவுகள் சேகரிப்பு மூலம் மாநில அளவில் நோயின் பரவலை மதிப்பிடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக தேசிய முதியோர் நல மருத்துவ மையம் செயல்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், மறதி நோய் போன்ற நீடித்த நரம்பியல் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண இந்த முயற்சி உதவும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் செயலாளர் உமா, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினீத், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி இராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா, தேசிய முதியோர் நல மருத்துவமனை இயக்குநர் தீபா, அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில், மறதி நோயை எதிர்கொள்ள மாநில அரசு மேற்கொண்டுள்ள இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.