சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த ஆண்டிலிருந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பின், மாநிலம் முழுவதும் 2025ஆம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதற்கமைய, அக்டோபர் மாதம் வரை தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். பின்னர், வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றனர். இதன் மூலம் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
நீக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர்; நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் அல்லது குறிப்பிடப்பட்ட முகவரியில் வசிக்காதோர் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர்; இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். அதில் 17.10 லட்சம் பேர் பெயர் சேர்க்கவும், 1.84 லட்சம் பேர் நீக்கவும், 5.51 லட்சம் பேர் திருத்தம் கோரி விண்ணப்பித்தனர்.
இத்துடன், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதன்மூலம் மொத்த விண்ணப்பங்கள் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 ஆகும். இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் வாக்காளர் பதிவு அலுவலர்களின் சரிபார்ப்பு பணியுடன் முடிவடைந்துள்ளது.
தேர்தல் ஆணையம், வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 66 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. ஆனால், அதில் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இதனால், இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 5 கோடியே 65 லட்சம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மாவட்டங்களுக்கான பட்டியல்கள் காலை 10 மணிக்குப் பின் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தங்கள் பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய வாக்காளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.