சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று வேலூரை அடுத்த அகரம்சேரியில் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மிகுந்த தீவிரத்துடன் செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தனித்தனி QR கோடு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை கொண்டவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விஜய் வருகையையொட்டி அகரம்சேரி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. வெயில் காரணமாக கூட்டம் நடைபெறும் இடத்தில் 600 அடி நீளமும் 140 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட மேற்கூரை அமைக்கும் பணி கடந்த இரவு முழுவதும் மும்முரமாக நடைபெற்றது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் அமர்வதற்கான நாற்காலிகள், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் நிகழ்ச்சி சீராக நடைபெற 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட காவல்துறையினர் சார்பில் 900 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று அடுக்குகளாக தகர ஷீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து காரில் சாலை மார்க்கமாக வேலூருக்கு புறப்பட்டார். அகரம்சேரி வந்தவுடன், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட பிரசார பஸ்சின் மேல் நின்று பேசுவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விஜய் வாகனத்தை பின்தொடர ரசிகர்கள் மற்றும் கட்சியினரைத் தவிர்க்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பின்தொடர அனுமதி பெற்ற குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டு, அவை மட்டுமே விஜய் வாகனத்துடன் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

இதேவேளை, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் நேரில் ஆய்வு செய்தார். நிகழ்ச்சி நாளை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதை மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக, அகரம்சேரி சுற்றுவட்டார சாலைகளில் சிறிய அளவில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வேலூரில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து இன்று காலை புறப்பட்டார். விஜய்யின் வருகையையொட்டி வேலூர் மற்றும் அகரம்சேரி பகுதிகள் முழுவதும் உற்சாகம் நிலவுகிறது.