மஸ்கட்:

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கான தேதி மற்றும் இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் உறுதியாகி உள்ளன. இதன்படி, ஜெனீவா நகரில் வருகிற 26-ந்தேதி இரு நாடுகளும் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளன என ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல் புசைதி அறிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைதளமான “எக்ஸ்” தளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணு ஆயுதம் தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தை வரும் வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெற உள்ளது. இது அணு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கில் இரு நாடுகளும் மேற்கொள்ளும் முக்கியமான முன்னேற்றமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்கா, ஈரானை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்குமிடையே கடுமையான பதற்றம் நிலவுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் நேரடி ராணுவ மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கு பகுதிகளில் பல்வேறு தளங்களுக்கு மாற்றி அமைத்து வருகிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை (பென்டகன்) வெளியிட்ட தகவலின்படி, அல் உதீத் விமான தளம் பகுதியில் பணியில் இருந்த நூறு வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் பஹ்ரைன், ஈராக், சிரியா, குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களிலும் அதிகாரிகள் மற்றும் ஆயுதங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மத்திய கிழக்கு பகுதிகளில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அமெரிக்க வீரர்கள் பணியில் உள்ளனர். போர் வெடித்தால் இவர்கள் நேரடியாக ஈரானின் தாக்குதலுக்கு இலக்காக மாறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கத்தாரில் அமைந்த அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த தாக்குதல் பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை. அமெரிக்கா முன்பு நடத்திய தாக்குதலுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் ஈரான் இதை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையில் ஈரான் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில், “மீண்டும் அமெரிக்கா எங்கள் நாட்டை தாக்கினால், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் மீது கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்கா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும், ராணுவ உபகரணங்களையும் மத்திய கிழக்கில் உள்ள பல பகுதிகளுக்கு மாற்றியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஈரான் கடல் எல்லையிலிருந்து தொலைவில் இரண்டு பெரிய போர் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு வராதபட்சத்தில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும், ஈரானில் தலைமை மாற்றம் அவசியம் எனவும் டொனால்ட் டிரம்ப் முன்பு தெரிவித்திருந்தார்.

மறுபுறம் ஈரானும் தனது ராணுவ தயாரிப்புகளை வலுப்படுத்தி, அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக அதன் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி காமேனி சமீபத்தில் எச்சரித்தார்.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைத்து, அணு ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவும், போர் அபாயத்தைத் தவிர்க்கவும் ஜெனீவாவில் நடைபெறவுள்ள அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சர்வதேச சமூகம் முழுவதும் இந்த சந்திப்பை கவனத்துடன் நோக்கி வருகிறது.