ஹார்முஸ் நீரிணை கட்டுப்பாடு: அமெரிக்காவுடனான ஒப்பந்த வரைவு குறித்து ஈரான் விளக்கம்
தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான சமரச பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கை குறித்த முக்கியத் தகவல்களை ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்பதில் உறுதியாக உள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் தீவிரமடைந்தது. ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் உயர் ராணுவத் தளபதிகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் பதிலடி தாக்குதல்களை நடத்தின. இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்ததும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கக் கடற்படை அந்தப் பகுதியை முற்றுகையிட்டதும் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்தது.
இந்தச் சூழலில், போர் முற்றுப்பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுடனான அடுத்தகட்ட போர் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதனையொட்டி, இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட உள்ள ஒப்பந்தத்தின் வரைவு அம்சங்களை ஈரானின் செய்தி நிறுவனங்களான ‘ஐஆர்என்ஏ’ மற்றும் ‘மெஹர்’ வெளியிட்டுள்ளன.
அந்த வரைவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
-
ஹார்முஸ் நீரிணை நிர்வாகம்: இந்த ஒப்பந்தத்தின் எந்தவொரு பகுதியிலும், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஈரான் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றோ அல்லது அதில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்றோ எந்த ஓர் உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை.
-
அணுசக்தி கொள்கை: ஈரானின் அணுசக்தி திட்டம், நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உட்பட்டே இருக்கும். யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான ஈரானின் இறையாண்மை உரிமைகள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஆகிய உரிமைகள் ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்படும்.
-
பொருளாதார நிவாரணம்: ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை விடுவிப்பது, அந்நாட்டின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது போன்றவை இந்த வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
-
துறைமுக முற்றுகை மற்றும் இழப்பீடு: ஏப்ரல் 13 முதல் அமலில் உள்ள ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். மேலும், போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட பெரும் சேதங்களுக்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் குறைந்தது 300 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும்.
-
பேச்சுவார்த்தை காலக்கெடு: லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அணுசக்தித் திட்டம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பிலும் பல உயிர்ச் சேதங்களையும், பொருளாதாரச் சரிவையும் ஏற்படுத்திய இந்த மோதல், சமரச ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்துள்ளது. எனினும், தனது இறையாண்மையிலும், அணுசக்தி உரிமைகளிலும் ஈரான் காட்டும் இந்த உறுதிப்பாடு, அமெரிக்காவுடன் அமையும் ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.