கன்னியாகுமரி:
நாகர்கோவில் அருகே உள்ள கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கியதுடன், ரூ.1,789 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு தொடக்கநிகழ்ச்சியையும் நடத்தினார். மேலும், ரூ.30 கோடி மதிப்பில் கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார்.

அந்த விழாவில் உரையாற்றிய ஸ்டாலின், “50 ஆண்டுகள் தொடர் உழைப்பின் பலனாக தி.மு.க.வின் தலைவராக உயர்ந்துள்ளேன். தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கியிருக்கிறது திராவிட மாடல் அரசு. மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்” என கூறினார். மேலும், “தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருகிறார். ஆனால் நாம் தினந்தோறும் மக்களுக்காக உழைக்கிறோம். என் சக்திக்கு மீறி மக்களுக்காகப் பணியாற்றி வருகிறேன்” என்றார்.
ஆனால் ஸ்டாலினின் இந்த உரைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனத்தைத் தொடங்கியுள்ளன. “மக்கள் நலனே இலக்கு என்றால், கடந்த மூன்றாண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களின் பயன் எங்கே? விலை உயர்வு, வேலைவாய்ப்பு குறைவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை” என சாடியுள்ளனர்.
மேலும், “உண்மையான அக்கறை நாங்கள்தான்” என்ற ஸ்டாலின் கூற்றை எதிரணிகள் நையாண்டியாக எடுத்துள்ளனர். “வாக்குறுதிகள் கொடுக்க ஸ்டாலின் வல்லவர்; ஆனால் செயல்படுத்துவது பற்றிய புள்ளிவிவரங்கள் பூஜ்யம்” என கூறி, அவரது பேச்சை அரசியல் பிரசாரம் மட்டுமே என விமர்சித்துள்ளனர்.
இதன் மூலம், கன்னியாகுமரியில் நடந்த நலத்திட்ட விழா அரசியல் வெப்பத்தை அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் ஸ்டாலின் தனது சாதனைகளை வலியுறுத்த, மறுபுறம் எதிரணிகள் “சொல் இருக்குது, செயல் இல்லை” என தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.