திண்டிவனம்:

பட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) தலைமைப் பிரச்சனை தீவிரமாகி வரும் நிலையில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார். இதன் மூலம் பா.ம.க. எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்த முடிவு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சியின் இளைய தலைமையினருமான அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே, கட்சியின் உரிமை மற்றும் அரசியல் திசை குறித்து கருத்து வேறுபாடுகள் நீண்ட நாட்களாக நிலவி வருகின்றன. இருவரும் தனித்தனி அணிகளாக இயங்கி வருவது கட்சியின் உள்ளக அரசியலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

அன்புமணி அணியானது ஏற்கனவே அ.தி.மு.க.பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால், ராமதாஸ் தலைமையிலான அணிக்கு அந்த கூட்டணியில் இடமில்லை. மறுபுறம், தி.மு.க. கூட்டணியில் சேரும் வாய்ப்பு இருந்தாலும், அக்கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி “பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறுவோம்” என்று தெளிவாக தெரிவித்துள்ளது.

இதனால், பா.ம.க. ராமதாஸ் அணிக்குத் தற்போது எந்த கூட்டணியைத் தேர்வு செய்வது என்பது பெரும் குழப்பமாகியுள்ளது. இதை தீர்க்கும் நோக்கில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்ந்த நிர்வாகிகளும் இதில் பங்கேற்கின்றனர்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை என் தலைமையில் நடைபெறும். தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இதில் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததாவது, “நாளைய கூட்டத்திற்குப் பிறகு பா.ம.க. எந்த கூட்டணியில் இணைவது என்ற தீர்மானத்தை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளனர்.