பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 2026–2027 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். நிதித்துறையை தனது வசம் வைத்துள்ள அவர், மாநிலத்தின் வரவு-செலவு திட்டம் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கர்நாடக சட்டசபை பொதுவாக ஆண்டுக்கு நான்கு முறை கூடுவது வழக்கம். ஆண்டின் தொடக்கத்தில் கூட்டுக் கூட்டத்தொடர், பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கிய கூட்டுக் கூட்டத்தொடர் 9 நாட்கள் நடைபெற்றது. அந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தர்ணா மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டதால் பல விஷயங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெறவில்லை.

குறிப்பாக கலால்துறை தொடர்பான முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு பொறுப்பேற்று கலால்துறை அமைச்சர் ஆர்.பி. திம்மாபூர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடைசி நாளில் எதிர்க்கட்சிகள் சட்டசபை உள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பின்னர் அந்த கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-மந்திரி சித்தராமையா முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து கவலை வெளியிட்ட அவர், குழந்தைகளின் மனநலம் மற்றும் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.

சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளின் மனநிலை, கவனம் மற்றும் சமூக வளர்ச்சியில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார்.

மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அறிவியல் நிறுவனம் (IISC) தலைமையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் இஸ்ரோ மற்றும் கியோனிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெங்களூருவில் “ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ. புதுமை மண்டலம்” என்ற புதிய தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

முதல்-மந்திரி சித்தராமையா இதற்கு முன்பு 16 முறை கர்நாடக மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது 17வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் என்ற பெருமை அவருக்கு ஏற்கனவே உள்ளது.

இந்த ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக மதுபானங்களுக்கான கலால் வரி மற்றும் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.