சென்னை:

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீப காலமாக தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் கவனம் ஈர்த்துவரும் இளம் திறமையாளர்களில் ஒருவராக திகழ்கிறார். “கட்சி சேரா”, “ஆச கூட” போன்ற தனிப்பாடல்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவர், தனது இசைத் திறமையின் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க தொடங்கின.

சாய் அபயங்கர் இசையமைப்பாளராக மலையாள திரையுலகில் அறிமுகமானது நடிகர் ஷான் நிகாம் நடித்துள்ள “பல்டி” திரைப்படத்தின் மூலம் ஆகும். இந்த படத்தின் மூலம் அவர் மலையாள திரைப்பட உலகிலும் தனது இசை பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும், அவர் இசையமைத்த “டியூட்” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் பல முக்கியமான படங்களுக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். “கருப்பு”, “மார்ஷல்”, இயக்குநர் அட்லி இயக்கி வரும் படம், இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், நடிகர் தனுஷ் நடிக்கும் படம், நடிகர் சிம்பு நடிக்க உள்ள மற்றும் “பார்க்கிங்” படத்தின் இயக்குநர் இயக்கும் படம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் அவர் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாய் அபயங்கர் இசையமைத்து பாடலிலும் தோன்றியுள்ள “பவழமல்லி” என்ற தனி சிங்கிள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சாய் அபயங்கர் ஊடகங்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லி இணையும் புதிய படத்தின் பணிகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சாய் அபயங்கர், அந்த படத்தின் இசை அமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், இயக்குநர் அட்லி குறித்து பேசும்போது அவர் கூறியதாவது: “அட்லி அண்ணாவைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். அவர் என்னை முதன்முதலில் சந்தித்தபோது, நான் ஒரு படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகவில்லை. அப்போது அவரிடம் நான் ஒரே ஒரு பாடலை மட்டும் கேட்க வைத்தேன். அந்த பாடலை கேட்ட உடனேயே, ‘எனது அடுத்த படத்துக்கு நீ இசையமைக்க முடியுமா?’ என்று அவர் என்னிடம் கேட்டார். அந்த கேள்வி எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது” என்று கூறினார்.

அட்லி தனது மீது வைத்த நம்பிக்கை தான் தனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். “அட்லி அண்ணா எனக்கு அளித்த நம்பிக்கையே என் வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது. அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது” என்றும் சாய் அபயங்கர் கூறினார்.

சாய் அபயங்கரின் இந்த பேச்சின் மூலம் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லி இணையும் புதிய திரைப்படத்திற்கு அவர் இசையமைக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.