சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து வரும் மார்ச் 13ஆம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தனது தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்திலும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது திமுக அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டாமல் செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அவற்றை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம், பணப்பலன்கள் மற்றும் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறினார். தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு தாமதம் செய்து வருவது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை கண்டித்து அதிமுக சார்பில் செயல்படும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைமையில் பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மார்ச் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த நிகழ்விற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையேற்கிறார்.
மேலும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன், தலைவர் தாடி ம. ராசு மற்றும் பொருளாளர் எம். அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில அளவிலான நிர்வாகிகள், போக்குவரத்துத் துறை நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.