திருச்சி:

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் நாளை (புதன்கிழமை) மாலை நடைபெற உள்ளது. 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த மாதம் திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில், மூன்றாவது முறையாக அவர் தமிழகம் வருகை தந்து திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

நாளைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்காக பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்கள் அமருவதற்காக 76 ஆயிரம் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கூட்டத்தில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 12 மாவட்டங்களிலிருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வர உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பஞ்சப்பூர் பகுதிக்கு சென்று கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி நகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மற்றும் மாநில போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகின்றனர். ஐ.ஜி. நவநீத் குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகம் வருவது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். தமிழ்நாட்டில் எப்போதும் காவி அரசியலுக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக மத்திய அரசின் ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்று புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில், மார்ச் 11ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பேரணியில் தமிழக கூட்டணி தலைவர்களுடன் கலந்து கொள்வதாக தெரிவித்தார். மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் திமுக அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் திமுக அரசின் நிர்வாக குறைகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்கள் நன்கு அறிந்திருப்பதாகவும், அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்த திட்டங்களுடன் மக்கள் இணைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.