புதுச்சேரி,
புதுச்சேரியில் அடுத்த மாதம் 9-ந் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடரும் என இரு கட்சிகளின் தலைவர்களும் முன்பே தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

மொத்தம் 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி மாநிலத்தில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை முதல்-மந்திரி ரங்கசாமியும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது சில முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் இணைக்கக் கூடாது என்பதும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதும் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி உடனடியாக ஏற்கவில்லை என கூறப்பட்டது.
இதனால் கூட்டணியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பேச்சுவார்த்தை குழு, மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுச்சேரி வந்து கலந்துரையாடல்கள் மேற்கொண்டது. அந்த சந்திப்பில் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்தனர்.
முன்னதாக, மன்சுக் மாண்டவியாவை சந்திக்காமல் முதல்-மந்திரி ரங்கசாமி திருச்செந்தூருக்கு சென்றதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஆனால் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, கூட்டணி உறுதியுடன் தொடர்கிறது என்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த அரசியல் பரபரப்பின் நடுவில், இன்று ரங்கசாமி மற்றும் மன்சுக் மாண்டவியா நேருக்கு நேர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் இணைக்க ரங்கசாமி ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மன்சுக் மாண்டவியா பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிட உள்ளன.
எந்தெந்த தொகுதிகளில் எந்த கட்சி போட்டியிடும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.