புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி இம்முறையும் டெல்லி செல்லவில்லை என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இன்று நடைபெற்ற என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் முதல்வர்கள் கூட்டத்தையும் அவர் புறக்கணித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பாரத் மண்டபத்தில் என்டிஏ கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பாஜக உயர் மட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டெல்லி செல்லாமல் இருந்ததோடு, இக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
மேலும், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றுள்ளார். ஆனால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. இம்முறை கூட அவர் விமான டிக்கெட் பதிவு செய்யாததால், கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு, மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டங்களை நடத்துகிறது. ஆனால், புதுச்சேரி முதல்வர் தொடர்ந்து பங்கேற்காமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.