புதுடெல்லி: இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகிக்கும் சாதனையை நிகழ்த்தியதற்காக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜவஹர்லால் நேரு 1952 மே 13ஆம் தேதி முதல் 1964 மே 27ஆம் தேதி வரை 4,398 நாட்கள் பிரதமராக இருந்தார். அந்த சாதனையை முறியடித்து, 2014 மே 26ஆம் தேதி பதவியேற்ற நரேந்திர மோடி, இன்றுடன் 4,399 நாட்களாக தொடர்ந்து பிரதமராக உள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பணியாற்றும் பெருமையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ் ஆட்சி, பொருளாதார மீட்சி, சமூக மாற்றம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏழைகளின் முன்னேற்றத்துக்கான கொள்கைகள், பழங்குடியின மக்களின் நலனுக்கான திட்டங்கள் அனைத்தும் உங்கள் பதவிக்காலத்தின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன” எனக் குறிப்பிட்டார்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது வெறும் பதவிக்கால நீளத்தை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய யுகத்தை பிரதிபலிக்கிறது. 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களை தீவிர வறுமையிலிருந்து விடுவித்தது மனிதகுல வரலாற்றில் தனித்துவமான சாதனை. பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பண்பாட்டு மீட்டுருவாக்கம் என அனைத்து துறைகளிலும் பாரதம் முன்னேற்றம் கண்டுள்ளது” எனக் கூறினார்.

அவர் மேலும், “காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் நிறுவுதல், சோழர்களின் பாரம்பரியத்தை போற்றுதல், வெளிநாடுகளில் இருந்து தொல்பொருட்களை மீட்டுக் கொண்டுவருதல் போன்ற முயற்சிகள் பாரதத்தின் பண்பாட்டு மரபுகளை செழுமைப்படுத்தியுள்ளன. உலக அரங்கில் பாரதத்தின் பெருமையை உயர்த்தியுள்ளார். 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி அவர் வழிநடத்துகிறார்” என பாராட்டினார்.

இந்த சாதனை, இந்திய ஜனநாயகத்தின் வலிமையையும், மக்களின் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.