மதுரை: உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்துக்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் புகார் எழுப்பியுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்ததைப் போல, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் இடைத்தரகர்கள் மற்றும் சில ஊழியர்கள் பக்தர்களிடம் கட்டண தரிசன முறையில் தவறாக பணம் பெற்றுக் கொண்டு அனுப்புவதாக கூறப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து கோயிலுக்கு வருகிறார்கள். கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த சூழலில், வெளிமாநில பக்தர்களிடம் சிலர் “விரைந்து தரிசனம் செய்யலாம்” எனக் கூறி அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, டிக்கெட் கட்டணம் பெற்ற ஊழியர் ஒருவர், டிக்கெட் வழங்காமல் மற்றொரு ஊழியருடன் இணைந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்பிய சம்பவம் நடந்தது. இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற முறைகேடுகள் இன்னும் தொடர்கின்றன என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இடைத்தரகர்கள் சிலர், தாங்கள் கோயில் ஊழியர்கள் எனக் கூறி வெளிமாநில பக்தர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றுகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பணம் கொடுத்தால் விரைந்து தரிசனம் செய்யலாம் எனக் கூறி பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர்.
இதை கோயில் நிர்வாகம் மற்றும் போலீஸார் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் திடீர் ஆய்வு செய்து, முறைகேடுகளை தடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோயில் நிர்வாகம் கூறுகையில், “கோயிலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. தரிசனத்துக்கு அம்மன் சந்நிதி ரூ.50, இரு சந்நிதிகளுக்கு ரூ.100 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக யாராவது கேட்டால் புகார் அளிக்கலாம்” என தெரிவித்தனர்.