ராமேஸ்வரம்: ரூ.733 கோடி மதிப்பிலான ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டம், தவெக அரசு முழு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1914 பிப்ரவரி 24ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை போர்ட் மெயில் ரயில் சேவை துவங்கப்பட்டது. அப்போது தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு பயணிகள் கப்பலும் இயக்கப்பட்டது. ஆனால் 1964 டிசம்பர் 22ஆம் தேதி தனுஷ்கோடியில் ஏற்பட்ட பேரழிவு புயலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். போர்ட் மெயில் ரயிலில் பயணம் செய்த 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த புயலால் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையேயான ரயில் பாதை முற்றிலும் அழிந்தது.

பின்னர், ரயில்வே அமைச்சகம் 17.20 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க முடிவு செய்து சர்வே பணிகளை மேற்கொண்டது. 2019 மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதைக்கான அடிக்கல் நாட்டினார்.

சென்னை ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு செய்து, புயல், கடல் காற்று, மழை வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க ரயில் பாதையை சாலை மட்டத்திலிருந்து ஐந்து மீட்டர் உயரத்தில் அமைக்க பரிந்துரைத்தனர். இதனால் திட்டச் செலவு ரூ.208 கோடியில் இருந்து ரூ.733 கோடியாக உயர்ந்தது.

ஆனால், கடந்த திமுக ஆட்சியின்போது, ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், புதிய ரயில் பாதை திட்டம் கடலோர சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று கூறி ஆர்வம் காட்டவில்லை. இதனால் திட்டம் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே போடப்பட்டது.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “புதிய ரயில் பாதை அகல ரயில் பாதையாகவும், மின்மயமாக்கப்பட்ட ஒற்றை வழித்தடமாகவும் அமையும். ஜடாயு தீர்த்தம், கோதாண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். 28.6 ஹெக்டேர் வனத்துறையிடம், 43.81 ஹெக்டேர் மாநில அரசிடம், 3.66 ஹெக்டேர் தனியாரிடம் உள்ள நிலங்களை கையகப்படுத்த வேண்டும். தவெக அரசு முழு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் பணிகள் துவங்கும்” என தெரிவித்தனர்.