சென்னை,

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றான வாட்ஸ் அப், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பயன்படுத்தி வருவது அதன் பிரபலத்தைக் காட்டுகிறது.

வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, காலம் காலமாக புதிய அப்டேட்களை வெளியிட்டு பயன்பாட்டை எளிதாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது டிபி தொடர்பான புதிய அப்டேட் ஒன்று டெஸ்ட் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வாட்ஸ் அப்பில் பயனர் ஒருவர் டிபி (முகப்பு படம்) வைக்காதிருந்தால், அவரது பெயரின் முதல் எழுத்து வெவ்வேறு வண்ணங்களில் காட்டப்படும். ஆனால் ஒரே பெயரில் பலர் இருந்தால், அவர்களை வேறுபடுத்துவது சிரமமாகி குழப்பத்தை ஏற்படுத்தும்.

இந்த சிக்கலை சரிசெய்யும் வகையில், புதிய அப்டேட் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, ஒரு பயனரின் மொபைல் தொடர்பு பட்டியலில் (கான்டாக்ட்) ஏற்கனவே புகைப்படம் சேமித்து வைத்திருந்தால், அதையே வாட்ஸ் அப் டிபியாகவும் காண்பிக்கும் வசதி அறிமுகமாக உள்ளது.

இந்த அம்சம் குறிப்பாக குழு உரையாடல்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரே பெயரில் உள்ளவர்களை எளிதாக அடையாளம் காண முடியும் என்பதால் பயனர்களுக்கு பெரிய வசதியாக இருக்கும்.

இந்த தகவலை வாட்ஸ் அப் பீட்டா தொடர்பான தகவல்களை வெளியிடும் வா பீட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

மேலும், இந்த புதிய அம்சம் பயனர்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பயனர் சேமித்து வைத்துள்ள தகவல்களையே பயன்படுத்துவதால், பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை.

மொத்தத்தில், டிபி இல்லாதவர்களையும் எளிதாக அடையாளம் காண உதவும் இந்த புதிய அப்டேட், வாட்ஸ் அப் பயன்பாட்டை மேலும் வசதியாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.