தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். பனை ஏறும் தொழிலாளியை காலில் சுட்டதாகக் குற்றம்சாட்டி கடும் சவால் விடுத்தார். தேதி குறித்து கல் இறக்குவேன், என்னை வந்து சுடுங்கள் என பேசினார்.

சீமான் கூறியது: சாதிக்கு தலைவன் வேண்டுமா, சாதிக்கு துடிக்கும் தலைவன் வேண்டுமா? நாட்டை ஆள்பவர் இறைவன்போல் இருக்க வேண்டும். சாதனை சொல்லி வாக்கு கேட்க தகுதியில்லாதவர்கள் காசு கொடுத்து வாக்கு வாங்குகின்றனர். காசு இல்லாமல் தோற்றுத் தோற்ரு நிற்கிறேன். நான்கு முறை போட்டியிட்டேன், நான் தோற்கவில்லை, நீங்கள்தான் தோற்றீர்கள்.
தோல்வி பயந்து 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை. சாதி, மதம் சொல்லி வாக்கு கேட்கவில்லை, தமிழன் இனத்தைச் சொல்லி கேட்கிறேன். வாக்குக்கு காசு கொடுக்க மாட்டேன், சிறந்த வாழ்க்கை தருவேன். அதிமுக ஆட்சியில் தந்தை, மகனை அடித்துக் கொன்றனர். பனை ஏறும் தொழிலாளியை காலில் சுட்டுள்ளனர்.
நான் கல் இறக்குகிறேன். தேதி குறித்து மீண்டும் கல் இறக்குவேன். என்னை வந்து சுடுங்கள். வென்று வருவேன். துப்பாக்கியால் சுட்டவர்களை பனையில் கட்டி பச்சை மட்டையால் அடிப்பேன். தூத்துக்குடியில் சுடச் சொன்னது யார்? பனை தொழிலாளியை சுடச் சொன்னது யார்? இவர்களுக்கு மானங்கெட்டு ஓட்டு போடுவீர்களா?
கள்ளச்சாராயம் காய்ச்சியவனை சுடாதவர்கள், பதநீர் இறக்குவதை சுடுகின்றனர். நோக்கம் என்ன? துப்பாக்கியால் சுட்டவரை டிஸ்மிஸ் செய்யாத ஆட்சியை டிஸ்மிஸ் செய்வோம். கள்ளச்சாராயம் குடித்தவருக்கு, நடிகன் பார்க்க நெரிசலில் இறந்தவருக்கு 10 லட்சம் கொடுத்தனர். 2 கால்களிலும் சுடப்பட்டவர் குடும்பத்துக்கு என்ன கொடுத்தீர்கள்?
அவரது குடும்பத்துக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மக்களிடம் கையேந்தி காப்பாற்றுவேன். டாஸ்மாக்கை மூடுவேன், பனை, தென்னை, ஈச்ச மரங்கள் இறக்க உரிமை தருவேன். தேர்தலில் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள். காமராஜர் நல்லாட்சி கொடுத்தார், அதைவிட சிறந்த ஆட்சி தருவேன்.
தியேட்டரில் விசில் அடித்து, தெருவிலும் விசில் அடிக்காதீர்கள். ரோடு ஷோ பார்த்து மயங்காதீர்கள். இதுவரை என்னுடன் நில்லவில்லை, இனியாவது நில்லுங்கள். பாவூர்சத்திரம், கடையநல்லூர் பகுதிகளில் தென்காசி, கடையநல்லூர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.