தமிழகம் முழுவதும் 5.73 கோடி பேருக்கு பூத் சிலிப் விநியோகம் தொடக்கம்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை ஏற்பாட்டு, 5.73 கோடி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகப் பணி பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 18-க்குள் முடிக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சென்னையில் 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் உள்ளனர். தற்போது தமிழகத்தில் 2 கோடியே 80 லட்சத்து 30,658 ஆண், 2 கோடியே 93 லட்சத்து 4,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத் தினர் என மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43,291 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு எளிதாக வாக்களிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் தகவல் சீட்டுகளை (பூத் சிலிப்) விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் 975 அமைவிடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 16 தொகுதிகளிலும் விநியோகம் தொடங்கியது.

இப்பணிகளை அந்தந்த தொகுதித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் வழங்கும்போது வாக்காளர்களின் கையெழுத்து அல்லது விரல் அடையாளத்தைப் பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. விநியோகிக்கப்படாத சீட்டுகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திருப்பி வழங்கி, உறையில் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் வசதிக்காக பூத் சிலிப் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரிசை எண், பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இம்மாற்றம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காண உதவும். வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் விரைவாகக் கண்டறிய உதவும்.

பூத் சிலிப் வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்கப்படாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணி வாக்குப்பதிவு நாளில் குழப்பங்கள் குறைய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.