தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு: வாக்குப்பதிவு வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் கட்டுப்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். வாக்குப்பதிவு நடைபெறும் வரை அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பதவிக்காலம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. அதன் படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலை எதிர்கொண்டன. இதனால் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி உருவாகி, அரசியல் சூழல் கடுமையாகத் திளைத்தது.

தமிழகம் முழுவதும் தலைவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதிதோறும் சென்று பிரசாரம் செய்து, பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், பிரசாரம் முடிந்த உடன் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126-ம் பிரிவின் கீழ் பல கட்டுப்பாடுகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இவை வாக்குப்பதிவு முடியும் வரை தொடரும்.

தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தக்கூடாது என்றும், அவற்றில் பங்கேற்கவும் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் தொடர்பான எந்தச் செய்தியையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். வானொலி, குறுஞ்செய்தி, இணையம், வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பரப்பக்கூடாது. மின்னணு வடிவிலான எந்தவொரு தகவல் தொடர்பு வழியிலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க நிகழ்வு அல்லது வேறு எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்வையும் பயன்படுத்தி தேர்தல் விவகாரங்களைப் பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விதிகள் மீறப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொகுதி வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதவர்கள் இன்று மாலை 6 மணிக்குப் பிறகு அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்யாண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் போன்ற இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என்பதையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணியுடன் செயலிழந்துவிடும். வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும், அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவருக்கான ஒரு வாகனம், மேலும் முகவர் அல்லது பணியாளர்களுக்கான ஒரு வாகனம் என மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியே வழங்குவார்.

அதேநேரம், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து கொண்டு செல்ல வாகனத்தை வாடகைக்கு எடுப்பதோ, வாங்குவதோ, பயன்படுத்துவதோ முறைகேடான செயலாகும் என்றும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டனைக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்கு வெளியே மட்டும் வேட்பாளர் அல்லது கட்சிகளின் தேர்தல் அலுவலகத்தை அமைக்கலாம்; அங்கு இருவர் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் அனைத்தும் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.