திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் (தனி) தொகுதி, விவசாயம் பெரும் அடிப்படையாகக் கொண்ட தொகுதியாக உள்ளது. இங்கு மல்லி, சம்பங்கி, முல்லை போன்ற பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. ஜவ்வாது மலையும், செங்கம் மலையும் தொழிற்சாலைகளை சூழ்ந்து கிராமங்கள் பரவியுள்ள இந்தத் தொகுதி, 44 ஊராட்சிகள், 2 ஊராட்சி ஒன்றியங்கள், செங்கம் நகராட்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. செங்கம் பேரூராட்சி பின்னர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றை குறுக்கிட்டு 1958-ல் காமராஜரால் கட்டப்பட்ட சாத்தனூர் அணை, இத்தொகுதிக்கு முக்கிய அடையாளமாக உள்ளது. இது பாசன வசதியும், குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமும் ஆகும். சாத்தனூர் அணை பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய முதலை பண்ணையும் இருக்கிறது. ஜவ்வாது மலையில் இருந்து வரும் சுத்தமான நீரை சேமிக்க குப்பநத்தம் அணையும் அமைந்துள்ளது.
கடந்த 1951 முதல் 2026 வரை, செங்கம் தொகுதியில் 16 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், திமுக 6 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 3 முறை, தேமுதிக, ஜனதா, பொதுநலக் கட்சிகள் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன. 2026-ல் திமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ. மு.பெ.கிரி மும்முனைப் போட்டியில் களம் காண்கிறார். அதிமுக சார்பில் எஸ்.வேலு, தவெக சார்பில் பாரதிதாசன், நாம் தமிழர் சார்பில் ஷோபா, உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
செங்கம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு கல்லூரி அமைப்பு, நகராட்சித் தரம் உயர்வு உள்ளிட்ட வளர்ச்சிகளை முன்னெடுத்துள்ளதாக மு.பெ.கிரி கூறுகிறார். அதிமுக வேட்பாளர் எஸ்.வேலு மலைப் பகுதியில் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டி வேலு பிரசாரம் செய்கிறார். தவெக, நாம் தமிழர் வேட்பாளர்கள் சுய வளர்ச்சி, சமூக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் செய்கின்றனர்.
இத்தொகுதியின் முக்கிய கோரிக்கைகளில் சேமிப்பு கிடங்குகள், சிறுதானிய கொள்முதல் நிலையங்கள், வாசனை திரவிய தொழிற்சாலை, விவசாயிகளுக்கான குளிர்பதன கிடங்கு, மேல்செங்கத்தில் உள்ள விதை பண்ணையை பழையநிலைக்கு கொண்டு வரவேண்டும், நகராட்சி பேருந்து நிலையம், செங்கம் அரசு மருத்துவமனை மேம்பாடு, தானிப்பாடி மருத்துவமனை தரம் உயர்வு, மலைக் கிராமங்களுக்கான சாலை மேம்பாடு, சாத்தனூர் அணையில் சுற்றுலா வசதிகள் போன்றவை முக்கியமாக எழுப்பப்படுகின்றன.
செங்கம் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 2,68,997 உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 1,33,674, பெண் வாக்காளர்கள் 1,35,310, மூன்றாம் பாலினத்தவர்கள் 13 என உள்ளனர். முன்னதாக 1951 முதல் 2016 வரை திமுக 6 முறை, அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளன. செங்கம் தொகுதியின் இன்றைய போட்டி, திமுக மற்றும் அதிமுக இடையே முக்கியமாக நடைபெறுகிறது.