கோவை: சந்திரபாபு நாயுடு திமுக-காங்கிரஸ் மீது கடுமை சாட்டல்
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவையில் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். நாளையும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்கவுள்ளார். தேர்தல் களத்தில் இருமுனைப் போட்டி நிலவுவதாகவும், திமுக, காங்கிரஸ் சீர்திருத்த எதிரிகளாக இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

பேசிய அவர், “மக்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்ததற்காக திமுக, காங்கிரஸ் கட்சிகள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி எடுத்த இந்த முடிவு நாட்டின் மிக முக்கியமான முற்போக்கு நடவடிக்கைகளில் ஒன்று. இதை எதிர்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பெண்களுக்கு அநீதி செய்துள்ளன” என்றார்.
சீர்திருத்தங்களுக்கு எப்போதும் எதிர்ப்பாக இருக்கும் இந்தக் கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பயன்படுத்துவதில் தவறிவிட்டது என்றும் அவர் சாடினார்.
“பெண்களுக்காக மோடிஜி செய்த 33 சதவீத இடஒதுக்கீடு நாட்டின் மிக முற்போக்கான முடிவு. இதை எதிர்த்த காங்கிரஸ், திமுக, பிற கட்சிகள் பெண்கள் அதிகாரமயமாக்கத்திற்கு துரோகம் செய்துள்ளன. ஒவ்வொரு பெண்ணும் இது குறித்து விவாதித்து கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த சந்திரபாபு நாயுடு, திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம் என உறுதியளித்தார். கோவை பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நாளை ஓசூர், ஆவடி, மதுரை, சாத்தூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதற்கிடையே, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தோல்வுக்கு திமுக, காங்கிரஸ் காரணம் என பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் தமிழகத் தேர்தலில் முக்கிய இடம்பெற்றுள்ளன.