வாக்களிக்க 12 ஆவணங்களை அடையாளமாக காட்டலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:
தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்களிக்க வருபவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த 12 மாற்று ஆவணங்களை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ECI Net இணையதளம் மூலம் வாக்காளர் எண்ணை பதிவு செய்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணின் மூலம் OTP பெற்று டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், கீழ்க்கண்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்:

  1. ஆதார் அட்டை
  2. புகைப்படத்துடன் கூடிய வங்கி / தபால் கணக்கு புத்தகம்
  3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி அடையாள அட்டை
  4. மருத்துவ காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் அட்டை
  5. ஓட்டுநர் உரிமம்
  6. PAN கார்டு
  7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் திறனட்டை
  8. பாஸ்போர்ட்
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  10. மத்திய / மாநில அரசு அல்லது பொதுத்துறை பணியாளர் அடையாள அட்டை
  11. எம்.பி / எம்.எல்.ஏ / எம்.எல்.சி அடையாள அட்டை
  12. மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை

தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்ததாவது, பூத் சிலிப் (வாக்காளர் தகவல் சீட்டு) மட்டும் கொண்டு வாக்களிக்க முடியாது. அதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் எந்த ஆவணத்தையும் காட்டி வாக்களிக்க அனுமதி இல்லை.