கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக மனு
கோவை:
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றம்சாட்டி, தேர்தலை நிறுத்தக்கோரி AIADMK தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் வக்கீல் அணி உறுப்பினர்கள், கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரதாப் சிங்கை சந்தித்து மனு வழங்கினர்.
அந்த மனுவில், கரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாகவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என அச்சுறுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு வருவதால், கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனிநபர்கள் சார்பிலும் தலைமை தேர்தல் ஆணையருக்கு பணப்பட்டுவாடா தொடர்பாக ஏராளமான புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.