TN Assembly Election | தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.. மக்கள் உற்சாகம்!
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், நாள் முழுவதும் பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதி நேரத்தில் பல வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகரித்ததால் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் விதிமுறையின்படி மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த அனைவரும் வரிசையில் நின்று இரவு 8 மணி, 9 மணி அல்லது அதற்கும் மேலாக இருந்தாலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. பல முக்கிய தலைவர்கள் காலை முதலே வந்து வாக்களித்தனர். சில பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு, வாக்குவாதம் போன்ற சம்பவங்களும் பதிவானது. இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மக்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொண்ட இந்த தேர்தலின் இறுதி முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.