தமிழக சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு.. மக்கள் உற்சாகம்!
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.24% ஆக உயர்ந்துள்ளது. காலை 11 மணிக்கு 37.56% ஆக இருந்த வாக்குப்பதிவு, மதியம் 1 மணிக்கு 56.81% ஆகவும், பிறகு 3 மணிக்கு 70% ஆகவும் உயர்ந்து தற்போது 82.24% என்ற சாதனை அளவிற்கு சென்றுள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர் உள்ளனர். மேலும் 14.5 லட்சம் முதல் முறை வாக்காளர்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாலை 5 மணி நிலவரப்படி அதிக வாக்குப்பதிவு பெற்ற தொகுதிகளில் குமாரபாளையம் 90.98%, சங்ககிரி 90.30%, கிருஷ்ணராயபுரம் 89.83%, பவானி 89.57%, காங்கேயம் 89.46% ஆகியவை முன்னிலையில் உள்ளன. அதேசமயம் குறைந்த வாக்குப்பதிவு பெற்ற மாவட்டங்களில் நீலகிரி 75.90%, திருநெல்வேலி 75.10%, சிவகங்கை 74.44%, ராமநாதபுரம் 74.41%, கன்னியாகுமரி 73.44% ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுவதால் மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இறுதி நேர வாக்குப்பதிவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.