தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணியில் இருந்தபோதே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த இந்த சம்பவம் போலீஸ் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சி.ஐ.டி போலீஸ் துணை சூப்பிரண்டாக (DSP) பணியாற்றி வந்தவர் ராமகிருஷ்ணன் (56). இவர் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடையக்கோட்டை வாக்குச்சாவடி பகுதிகளில் நேற்று மாலை தேர்தல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகிலிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த சக அதிகாரிகள் மற்றும் போலீசார் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர்.

தமிழக தேர்தல் பணிகளில் பல ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், பணிச்சுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த அதிகாரிக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் கடமையை நிறைவேற்றும் பணியில் இருந்தபோதே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.