தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை அதிக கவனம் பெற்ற பகுதியாக கொங்கு மண்டலம் உருவெடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் சாதனை வாக்குப்பதிவு நடந்த நிலையில், அதிக சதவீத வாக்குகள் பதிவான மாவட்டங்கள் அனைத்தும் மேற்கு தமிழகம் எனப்படும் கொங்கு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வாக்குப்பதிவு கரூர் மாவட்டத்தில் 92.63% ஆக பதிவாகியுள்ளது. இது மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 90.76%, நாமக்கலில் 90.21%, ஈரோட்டில் 90.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 சதவீதத்தை கடந்த மாவட்டங்கள் அனைத்தும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு மண்டலத்தில் உள்ள மக்கள் தேர்தலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் வாக்களித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கிராமப்புற பகுதிகளில் அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தது இந்த உயர்ந்த சதவீதத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மாறாக, தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது. தமிழ்நாட்டிலேயே குறைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61% வாக்குகள் பதிவானது. ராமநாதபுரத்தில் 77.01%, திருநெல்வேலியில் 77.94%, தூத்துக்குடியில் 80.53%, தென்காசியில் 82.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் சிவகங்கை 76.66%, மதுரை 80.52%, தேனி 81.55%, விருதுநகர் 84.82% என பல தென் மாவட்டங்களிலும் 85% வாக்குப்பதிவை எட்டவில்லை.

இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் அதிக வாக்குப்பதிவால் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இறுதி முடிவுகளில் இந்த பகுதி முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.