
இந்திய ரெயில்வே துறையில் உற்பத்தி திறன் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 2025-26 நிதியாண்டில் மொத்தம் 7,914 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது இந்திய ரெயில்வே வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், மின்சார ரெயில்கள் மற்றும் பிற சிறப்பு பயன்பாட்டு பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து வகை ரெயில் பெட்டிகளும் நாடு முழுவதும் உள்ள உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024-25 நிதியாண்டில் 7,134 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 7,914 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதாவது கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிக உற்பத்தி பதிவாகியுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய ரெயில்கள் அறிமுகம், பழைய பெட்டிகள் மாற்றம், நவீன வசதிகள் கொண்ட கோச்சுகள் உருவாக்கம் ஆகியவற்றிற்காக ரெயில்வே நிர்வாகம் உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளது.
மேலும் 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இந்திய ரெயில்வே ஆண்டுக்கு சராசரியாக 3,300க்கும் குறைவான ரெயில் பெட்டிகளையே தயாரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தொழில்நுட்ப மேம்பாடு, இணைப்பு வசதிகள், உற்பத்தி திறன் உயர்வு ஆகிய காரணங்களால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பை கடந்துள்ளது.
பாதுகாப்பு, வேகம், வசதி மற்றும் அதிக பயணிகள் சேவையை இலக்காக கொண்டு இந்திய ரெயில்வே தன்னை முழுமையாக நவீனப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வளர்ச்சி, எதிர்காலத்தில் மேலும் புதிய ரெயில் சேவைகள் மற்றும் மேம்பட்ட பயண அனுபவத்திற்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.