தாம்பரம் அருகே அகரம்தென் கிராம ஊராட்சியின் ஜெ.ஜெ. நகரில், தேர்தலை முன்னிட்டு அவசர கதியில் தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணி தொடங்கிய கையோடு நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டதும், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டதும்தான் நடந்த நிலையில், அதன்பின் பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டதால், சாலை முழுவதும் குண்டும் குழியுமாகவும், புழுதி பறக்கும் நிலையாகவும் மாறியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்தென் கிராம ஊராட்சியின் ஜெ.ஜெ. நகரில் அடிப்படை சாலை வசதி இல்லாததால், கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பெரும் அவதியை அனுபவித்து வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அந்தப் பகுதியில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை காலப்போக்கில் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மேடும் பள்ளமுமாக காட்சியளித்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சைக்கிள் ஓட்டிகள், முதியோர், பள்ளி மாணவர்கள் என அனைவரும் தினசரி சிரமத்துடன் பயணித்து வந்தனர்.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே அந்தச் சாலையை சீரமைத்து சிமெண்டு சாலை அமைக்கும் பணி திடீரென தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பழைய சாலைப் பகுதி பெயர்த்து அகற்றப்பட்டதுடன், ஜல்லிக்கற்களும் கொட்டப்பட்டன. ஆனால் அதன் பின்னர் பணிகள் முன்னேறவில்லை. பொதுமக்கள் தரம் குறைந்த முறையில் அவசரமாக வேலை தொடங்கப்பட்டதாக கேள்வி எழுப்பியதும், ஒப்பந்ததாரர் பாதியிலேயே பணியை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து சாலை முழுவதும் சிதறிய ஜல்லிக்கற்கள் கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும்வர்கள் தடுமாறி கீழே விழும் அபாயம் உருவாகியுள்ளது. நடந்து செல்லும் மக்களின் கால்களும் கற்களால் பாதிக்கப்படுகின்றன. மேலும், வாகனங்கள் கடந்து செல்லும் போது எழும் தூசி காரணமாக அந்தப் பகுதி முழுவதும் மூடுபனி போலத் தோற்றமளிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேர்தல் காலம் என்பதால் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை எனவும், மக்கள் பயன்பாட்டிற்கான சாலை பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டதால் அன்றாடப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சாலை பணியை மீண்டும் தொடங்கி விரைவில் நிறைவு செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
அப்பகுதி மக்கள், “சாலை சீரமைப்பு தொடங்கியபோது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் பாதியில் நிறுத்தப்பட்டதால் இப்போது மேலும் துன்பம் அதிகரித்துள்ளது. தேர்தல் கால வாக்குறுதி மாதிரி தொடங்கிய பணி, மக்களின் உண்மையான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உடனே நிறைவேற்றப்பட வேண்டும்” என வலியுறுத்துகின்றனர்.