தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நெருங்கி வரும் நிலையில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட இந்த தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் நிர்வாகம் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எந்தவித குறைபாடும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்காக அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு சுற்று முடிவுகளும் உடனுக்குடன் அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அர்ச்சனா பட்நாயக் வலியுறுத்தினார்.

முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தி முடித்தது போலவே, வாக்கு எண்ணிக்கையும் சட்ட ஒழுங்கு சிக்கல்கள் இல்லாமல் துரிதமாகவும் தெளிவாகவும் நடத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மே 4-ஆம் தேதியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.