
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறைகளே இல்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சந்தை விலையை விட அதிக விலையில் 45,800 மின்மாற்றிகள் வாங்கியதில் ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்ற வானதி சீனிவாசன், இது ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி என குறிப்பிட்டார்.
மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் நடந்ததாக கூறப்படும் ஊழல்களை அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தாலும், திமுக அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறது என அவர் குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் ஊழலுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமெனில் அது முன்னாள் மின்துறை மற்றும் டாஸ்மாக் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கே வழங்க வேண்டும் எனவும் அவர் விமர்சித்தார். மின்மாற்றி கொள்முதல் முறைகேடு வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டிருப்பது முக்கிய முன்னேற்றம் என கூறினார்.
செந்தில் பாலாஜி மீது உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், ஊழலில் ஈடுபட்டவர்கள் இனி தப்ப முடியாது என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் சூழலில் இந்த குற்றச்சாட்டுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.