தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் நெருங்கி வரும் நிலையில், சென்னை மாவட்டத்தில் அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த இந்த பயிற்சி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது.

கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் இணை ஆணையாளருமான க. கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து நடைமுறைகளும் அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் பின்னர் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை நாளில் தபால் வாக்குகள் தனியாக தலா 4 மேசைகளில் எண்ணப்படும். சேவை வாக்காளர்களின் ETPBS வாக்குகளும் தனி மேசைகளில் பரிசீலிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தலா 14 மேசைகளில் சுற்று வாரியாக எண்ணப்பட உள்ளன.

ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம் உள்ளிட்ட தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. லயோலா கல்லூரியில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நா. பூஷ்ணாதேவி, உதவி ஆணையாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மே 4-ஆம் தேதி சென்னை அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் நாள் என்பதால், தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.