தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாநிலம் முழுவதும் பரபரப்பாக தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் பிற கட்சிகள் களமிறங்கின. மேலும் சில தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மொத்தம் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டது தேர்தலுக்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இன்று காலை 8 மணி முதல் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படையினர், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்டோரின் தபால் வாக்குகள் முதலில் கணக்கிடப்படுகின்றன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று வாரியாக எண்ணப்படும்.

ஒவ்வொரு தொகுதியிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 11 மணிக்குள் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார், துணை ராணுவம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அனுமதி பெற்ற அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியை அமைப்பது யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைக்க உள்ளதால், அரசியல் வட்டாரங்கள் முழுவதும் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.