
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அரசியல் களத்தில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியுடன் உள்ள நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பிற கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகளில் த.வெ.க. குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தேர்தலுக்கு பிந்தைய அரசியல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கட்சி தலைமையே முன்கூட்டியே செயலில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக த.வெ.க. வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்னை பனையூரில் ஆலோசனைக்காக அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கட்சியின் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ளவும், மாவட்ட அளவில் வலுவான அமைப்பை உருவாக்கவும், பிற கட்சிகளில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளோர், சீனியர்களால் புறக்கணிக்கப்பட்டோர் மற்றும் மாற்றத்தை விரும்பும் நிர்வாகிகளை அணுகுமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை கவனிக்குமாறு கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கோவை மண்டலத்தில் உள்ள 5 மாவட்ட செயலாளர்களுக்கு இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், தேர்தல் முடிந்தவுடன் சில முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைவார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் கட்சியில் இணைய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளிலேயே இப்படியான தகவல் வெளியானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக பாரம்பரிய கட்சிகள் இதை தீவிரமாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் புதிய கூட்டணிகள் மற்றும் கட்சி மாற்றங்கள் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.