சென்னை அரசியல் களத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே பலரையும் அதிரவைத்த மாற்றங்கள் நிகழ்ந்தன. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையில் தவெக கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்திருப்பதும், அவரை விட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலையில் இருப்பதும் இன்றைய தேர்தல் முடிவின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

விஎஸ் பாபு சாதாரண அரசியல் முகம் அல்ல. இன்று தவெக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அவர், ஒருகாலத்தில் திமுகவில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தவர். வட சென்னையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசியல் முக்கியஸ்தராக இருந்த வி.எஸ்.பாபு, திமுகவின் மாவட்ட அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என கூறப்படுகிறது. கட்சியின் உள்ளக வட்டாரத்தில் அவர் ஒரு வலுவான அமைப்பு முகமாகவே பார்க்கப்பட்டார். பின்னர் காலப்போக்கில் அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, வேறு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கொளத்தூர் தொகுதி உருவானது. அந்தத் தொகுதி உருவானதிலிருந்து மு.க.ஸ்டாலின் அங்கு களம் காணத் தொடங்கினார். அப்போது ஸ்டாலின் வெற்றிபெற முக்கியமான களப்பணி செய்தவர்களில் வி.எஸ்.பாபுவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. திமுகவின் கடுமையான பின்னடைவு சூழலிலும் ஸ்டாலினை வெற்றிக்கரைக்கு கொண்டு சேர்த்ததில் அவர் முக்கியப் பங்கு வகித்ததாக அரசியல் வட்டாரங்கள் நினைவுகூருகின்றன.
ஆனால் அந்த வெற்றிக்குப் பிறகு இருவருக்கிடையேயான உறவு நீடிக்கவில்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், வி.எஸ்.பாபு மீது ஸ்டாலின் அதிருப்தி கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவரின் அரசியல் செல்வாக்கு படிப்படியாக குறைக்கப்பட்டதாகவும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து வி.எஸ்.பாபு திமுகவிலிருந்து விலகி, பின்னர் அதிமுகவில் இணைந்தார். அங்கும் எதிர்பார்த்த இடமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அவர் மீண்டும் புதிய அரசியல் திசையைத் தேடினார்.
தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில், விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தது அவரது அரசியல் பயணத்தில் பெரிய திருப்பமாக அமைந்தது. அதன் பின்னர் கொளத்தூர் தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். இன்று அதே தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் ஸ்டாலினின் வெற்றிக்குப் பின்னணியாக இருந்த அதே முகம், இன்று அவருக்கே பெரும் சவாலாக மாறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஏப்ரல் 30ஆம் தேதி விஜய்யின் நீலாங்கரை இல்லம் முன்பு வி.எஸ்.பாபு செய்த கைஅசைவும் இப்போது புதிய அர்த்தத்தை பெற்றிருக்கிறது. அப்போது அது பலருக்கும் புரியாத சைகையாக இருந்தாலும், இன்று அந்தச் செயல் ஸ்டாலினைச் சுட்டிய அரசியல் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. கொளத்தூர் முடிவுகள் உறுதியாகும் நிலையில், வி.எஸ்.பாபு தவெகவுக்கு அளித்துள்ள இந்த முன்னிலை, கட்சியின் எதிர்கால அரசியல் கணக்குகளில் முக்கிய இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.