
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர், “தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும் தைரியம் விஜயிடம் இருந்தது என்றும், வெற்றி பெறுவேன் என்ற அவரது தன்னம்பிக்கை வியப்பை அளிப்பதாகவும் கூறினார். “தவெக 100 சதவீதம் வெற்றி பெறும் என விஜய் முழு நம்பிக்கையுடன் இருந்தார். அவர் பெற்றுள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது” என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு தந்தையாக விஜயின் வெற்றியை பெருமையாக பார்க்கிறேன் என்று கூறிய எஸ்.ஏ. சந்திரசேகர், மக்களிடம் நன்றி தெரிவித்தார். “விஜய்யை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்கள் கனவை அவர் நிறைவேற்றுவார். மக்கள் அவரை ஒரு தலைவராக மட்டும் அல்லாமல், தங்களுள் ஒருவராகவே பார்த்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை சுட்டிக்காட்டும் இந்த தேர்தல் முடிவுகள், பல்வேறு தரப்பினரிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.