சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைப் பெறவில்லை. இதனால் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சுமார் 126 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பது விஜய்க்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

தவெகவின் வரலாற்று வெற்றி

நேற்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்துள்ளது. இது தமிழக அரசியலில் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. இருப்பினும், இது பூப்பாதை அல்ல; முட்கள் நிறைந்த கிரீடமாகவே உள்ளது. தொங்கு சட்டசபை உருவாகியுள்ளதால், விஜய் கூட்டணி தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பெரும்பான்மை இல்லாத சூழல்

தேர்தலில் தவெகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 234 தொகுதிகளில் 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், 108 இடங்களுடன் நின்றுள்ளது. மைனாரிட்டி ஆட்சி நடத்துவது ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கும். கத்தி மேல் நடப்பதற்குச் சமமாகவே உள்ளது இது. கூட்டணி இன்றி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை.

எதிர்க்கட்சிகளின் வலிமை

விஜய்க்கு மிகப்பெரிய சவால், திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கொடுக்கும் எதிர்ப்பு. அவர்களுக்கு சேர்த்து சுமார் 126 இடங்கள் உள்ளன. சட்டமன்றத்தில் நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது தமிழகத்தில் இதுவரை காணாதது. அவர்கள் அரசியல் நுணுக்கங்களை அறிந்தவர்கள். பட்ஜெட் முதல் புதியக் கொள்கைகள் வரை ஒவ்வொரு முறையும் சவால் தருவார்கள்.

மைனாரிட்டி ஆட்சியின் வரலாறு

2006இல் திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்தியபோது, கூட்டணிக் கட்சிகள் குடைச்சல் கொடுத்தன. பாமக தலைவர் ராமதாஸ் வெளியிலிருந்து ஆதரவு தந்து, நிழல் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டார். விஜய்க்கு கருணாநிதி போன்ற அனுபவம் இல்லை. எனவே கூட்டணிகளைச் சமாளிப்பது கடினம்.

கூட்டணியின் சிக்கல்கள்

கூட்டணி அமைந்தாலும், கட்சிகள் கண்டிஷன்கள் வைப்பர். முக்கியத் துறைகளைப் பெறுவது முதல் நிர்வாக மாற்றங்கள் வரை கூட்டணி கட்சிகள் கைஞ்சலாக இருக்கும். சில கூட்டணிகள் விஜய்யின் சுத்தமான பிம்பத்தைப் பாதிக்கலாம். எனவே கவனமாகக் கையாள வேண்டும். விஜய்யின் வெற்றி மக்கள் செல்வாக்கை நிரூபித்தது. ஆனால், இனி சதுரங்க வேளை. தேர்தல் டிரைலர்; இனிமே மெயின் பிக்சர்