சென்னை: தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் மட்டுமே சரியான தீர்வு எனக் கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ஆலங்குடியில் உள்ள ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு அறிவித்த நிலையில், சில விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி கிடைத்துள்ளதாகவும், பெரும்பாலான விவசாயிகள் திருப்தி இல்லாமல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பிரேமலதா தெரிவித்தார். இதற்கு தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிட்டு கண்டித்துள்ளது. மேலும் கும்கேகோணத்தில் காவலரின் கையை முறித்த வன்முறை சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளதாகவும், ஆனால் உண்மையில் ஒரு கடை கூட நிரந்தரமாக மூடப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகவும் பிரேமலதா குற்றம் சாட்டினார். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே தேமுதிகவின் கோரிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசு மற்றும் சமூகப் பிரச்சனைகளை விமர்சித்த பிரேமலதா குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். இதையொட்டி தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை இரும்புக் கரத்துடன் அடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றாலே அரபு நாடுகள் போலக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என்றும் பிரேமலதா தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் மட்டுமே சரியான தீர்வு என்றும் அவர் தீவிரமாகக் கூறினார்.
விஜய் முதலமைச்சராக வந்தால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுமென நம்பி மக்கள் வாக்களித்ததாகவும், ஆனால் தற்போது நிலவும் சூழலில் குற்றங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற ஒழிப்பு குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேமுதிகவின் கோரிக்கை என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.