12 ஆண்டுகால சாதனை: நாடு தழுவிய பிரம்மாண்ட மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைத் தொடங்குகிறது பா.ஜ.க.!

புதுடெல்லி: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அடுத்த வாரத்துடன் வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 12 ஆண்டுகால சாதனை ஆட்சியை, நாடு முழுவதும் மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்கு பா.ஜ.க. தலைமை பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, “நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் மக்கள் நலனின் 12 ஆண்டுகள்” என்ற முழக்கத்துடன், நாடு தழுவிய அளவிலான விரிவான மக்கள் தொடர்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சாதனைகளை விளக்கும் 5 கையேடுகள் வெளியீடு:

பிரதமர் மோடி அரசின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைத் தலைப்பு வாரியாகப் பிரித்து, ஐந்து முக்கிய வழிகாட்டி கையேடுகளாக பா.ஜ.க. வெளியிட உள்ளது.

  • முதன்மையாக தேசம்: கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து மோடி அரசு எடுத்த மிக முக்கிய முடிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

  • தேசக் கட்டுமானம்: நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மாண்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

  • தேசிய வலுவூட்டல்: இந்தியாவின் ராணுவ வலிமையையும், நாட்டின் பாதுகாப்பையும் உலகிற்குப் பறைசாற்றிய துல்லியத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துார் போன்ற ராணுவ நடவடிக்கைகளை இக்கையேடு முன்னிலைப்படுத்துகிறது.

மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:

இன்று முதல் ஜூன் 21, 2026 வரை நாடு முழுவதும் பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஜூன் 8 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் தொடர் ஊடகச் சந்திப்புகள் நடைபெறவிருக்கின்றன. இவற்றில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று அரசின் சாதனைகளையும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தையும் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் நாடு முழுவதும் மரம் நடுதல் மற்றும் தூய்மைப் பணிகள் போன்ற சமூக நலத்திட்டங்களும் தீவிரமாக முன்னெடுக்கப்பட உள்ளன.

சிறப்பு மக்கள் நல முகாம்கள்:

பிரச்சாரக் காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு மக்கள் நல முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், சிறு வணிகர்களுக்கான பி.எம்.ஸ்வநிதி மற்றும் இலவச மின்சாரத்திற்கான பி.எம்.சூர்ய கர் போன்ற பல்வேறு மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களின் கீழ் நேரடிப் பதிவுகள் மேற்கொள்ளப்படும். இந்த முகாம்களுக்குப் பொதுமக்களை அழைத்து வந்து சேர்க்கும் பணியில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாவட்ட வாரியாகப் பொதுக்கூட்டங்கள், அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சிறப்புப் பயிலரங்குகளும் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் மூலம் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசத்தையும் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வாக மாற்றுவதற்கான பா.ஜ.க.வின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதே இந்த 12 ஆண்டு சாதனை விழாவின் முக்கிய நோக்கமாகும்.